Tuesday, February 22, 2011

விளம்பரங்கள் பற்றி:

சமீப காலங்களில் விளம்பரங்கள்தான் மக்களை நன்கு கவருகின்றன. இதில் சந்தேகம் ஏதும் இல்லைதான்!. ஆனால் சில விளம்பரங்களைப் பார்க்கும் போதுதான் எதற்காக (விளம்பர படுத்தவா? அல்லது மக்களை மன ரீதியாக பயமுறுத்தவா?) என்று புரியவில்லை!. உதாரணத்திற்கு சமீபத்தில் ஒரு விளம்பரம். அதில் ஒரு பாலிவுட் நடிகர் வருகிறார். இரயிலில் Sleeper Class பயணம். கீழ் சீட்டில் ஒரு கணவன் மனைவி. கணவன் மனைவியிடம், சொந்தமாக ஒரு restaurant (ரெஸ்டாரண்ட்) வைக்கப் போவதாக கூறுகிறார். அடுத்த காட்சியில், நடிகர் கணவனை சந்தித்து, “நீ துவங்கும் ரெஸ்டாரண்ட் நல்லா ஓடாது, ஏதாவது அசம்பாவிதம் நிகழலாம்!” என்று குழப்பி விளம்பர நிறுவனத்தின் ஆயுள் காப்பீட்டினை எடுக்க வைக்கிறார்.
என்னே! வியாபார தந்திரம்!. ஆயுள் காப்பீடு எடுக்க இப்படித்தான் மக்களைப் பயமுறுத்தி, குழப்புவதா?.
பல perfume (உடல் நறுமண தைலம்) விளம்பரங்கள் ஆண் பெண் இனக் கவர்ச்சியினை மையப்பொருளாக கொண்டுள்ளன. ஓர் ஆண் perfume பயன்படுத்தினால் பெண்கள் மடியினில் வந்து விழுகிறார்களாம் அல்லது அந்த ஆண் பின்னால் அலைகிறார்களாம். என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பெண்ணீயவாதிகளே எங்கே போனீர்கள்?. யாரேனும் பெண்ணீயவாதிகள் என்று இருக்கிறீர்களா? இருந்தால் குரல் கொடுக்கவும்.
ஒரு பொருளை விற்கின்ற போது, விற்பவன் மட்டுமே புத்திசாலி!. வாங்குபவன் என்றைக்கும் முட்டாளே!. நான் சொல்வது சரிதானே!

Thursday, February 17, 2011

ஹைக்கூ

தனியே உட்கார்ந்து யோசித்துப் பார்
நீயும் புத்தனே!

Wednesday, February 9, 2011

எங்கேயோ எப்போதோ கேட்டது:வைரமுத்து அவர்களின் கவிதை

எப்போதோ பண்பலை வானொலியில் கேட்ட கவிப்பேரரசு. வைரமுத்து அவர்களின் கவிதை உங்களுக்காக:

என்னைப் பார்க்க ஊரில் இருந்து வந்திருந்தனர்
உறவினரும் நண்பரும்!
“அண்ணே! சிவாஜியை பார்த்து இருக்கீங்களா?
ரஜினியுடன் நல்ல பழக்கமா?” என்றெல்லாம்
விசாரித்தனர்!
நானும் நன்றாகச் சிரித்து சமாளித்தேன்!
அவர்கள் சென்ற பின்
அறையில் உள்ள புத்தகங்கள் எல்லாம்
என்னிடம் கேட்டன:
”இவ்வளவு கேட்டார்களே! எங்களைப் பற்றி ஏன் ஒருவரும் விசாரிக்கவில்லை?”
நான் மெளனமானேன்!
அருகில் உள்ள நண்பனையும், காதலையும்
புறக்கணித்து விட்டு
எங்கேயோ தொலைத்த நண்பனையும், காதலையும்
நாம் பேஸ் புக்கிலும், ஆர்க்குட்டிலும்
தேடிக் கொண்டிருக்கிறோம்!