இப்போதுதான் ஓட்டலில்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ஒரு சிவாஜியின் பழைய பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
கடையில் வேலை செய்யும் ஒருவர் “அண்ணே ! இந்தப் பாட்டுதான் எங்க ஊரு சினிமாத்தியேட்டருல
நைட் சோவுக்கு முன்னாடி போடற கடைசி பாட்டு” என்றார். நான் நினைத்துக் கொண்டேன் நம்மலப்
போலவும் ஆட்கள் இருக்காங்க இந்த ஊரில் என்று நினைத்துக் கொண்டேன். சென்னை பல நேரங்களில்
மிரட்டினாலும், சில நேரங்களில் சிலாகித்து மகிழவும் வைத்து விடுகிறது. நினைவுகளுக்குத்தான்
எத்தனை சக்தி!.
போன வாரம் தான்,
அழகேசன் போன் செய்தான். குரலை மாற்றிக் கொண்டு பேசினான். அதுவும் ரியல் எஸ்டேட் சம்பந்தமான
ஆள் போல பேசினான். குரலைக் கேட்டதும் எனக்குள் அழகேசனின் நினைவுகள் மின்னலாய் வந்து
போனாலும் அவனா என்ற சந்தேகத்துடனே பேசினேன். எல்லாம் ஆங்கிலத்தில் பேசிய பின் கடைசியாக “டேய் ! எப்படிடா இருக்க? நான் தான் அழகேசன் பேசுறேன்!
“ என்றான். “டேய் ! எனக்கு அப்பவே ஒரு டவுட் தான். இருந்தாலும் விட்டுடேன்” என்ற படி
அளவளாவிக் கொண்டிருந்தேன். அழகேசன் படித்தது எம்பிஏ. ஆனால் எனக்குத் தெரிந்து எல்லா
நிலைகளிலும் வேலை பார்த்து இருக்கின்றான். நல்ல எண்ணம் கொண்டவன். சில சமயங்களில் வெள்ளந்தியாய்
இருப்பான். அவனைப்பற்றிய நினைவுகளுக்கு அவன் செயல்பாடுகளே காரணம். இன்னும் நிறைய பேர்
பற்றிய நினைவலைகள் என்னுள் ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன என்னுள். சத்யா , ஸ்ரீதர்,
கமல் ,மணிவண்ணன், விமல், புகழ், சுபாஸ் , கவி இவர்கள் எல்லோரும் என்னுள் ஒரு முறையேனும்
இவர்களுடைய நினைவுகளால் என்னுள் எட்டிப் பார்த்து விடுவார்கள். டாக்டரிடம் செக்கப்புக்குப்
போனால், அவர் எங்க ஊர் ரெங்கராஜ், தர்மராஜ் டாக்டரை நினைக்கச் செய்கிறார். தர்மராஜும்,
ரெங்கராஜும் பீஸ் அதிகம் வாங்க மாட்டார்கள். சென்னையிலோ, நான் போன டாக்டர், கன்சல்ட்
பீஸ் மட்டும் 150 வாங்குகிறார். இன்னும் சில இடங்களில் 300 ரூபாயாம். தர்மராஜும், ரெங்கராஜும்
ஏதேனும் மருத்துவமனைகளைக் கண்டாலெ நினைவாடுகின்றனர்.
எப்எம்மில் ஏதேனும்
பழைய பாடல் கேட்டால், 1998 களில் என் ஊரில் இடிக்கப்பட்ட பாலாஜி டூரிங் டாக்கீஸ் சொற்ப
நொடிகளில் என் நினைவுகளில் கட்டப்பட்டு விடுகிறது. அங்கே பட இடைவேளைகளின் போது தின்னப்பட்ட
கடலை மிட்டாயும், முறுக்கும் நினைவின் நாசியினை உரசிச் செல்கின்றன. இப்படி இன்னும்
சொல்லவும், மெல்லவும் முடியாத நினைவுகள் ஏராளம்.
கஷ்டப்பட்டு உழைத்து
காசு வாங்குபவனைப் பார்த்தும், ஏமாற்றி காசு வாங்குபவனைப் பார்த்தும் ரூபாய் நோட்டில்
உள்ள காந்தி ஒரே மாதிரி சிரிப்பதைப் போன்றே நினைவுகளும் ஏதோ ஒரு மூலையில் நின்று கொண்டு
நம்மைப் பார்த்து எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கின்றன.