Monday, July 23, 2012

ப்ளெக்ஸ் பேனரும் – தமிழ் மக்களும்


                                     கடந்த 5 வருடங்களாக தமிழ் நாட்டில் ”ப்ளெக்ஸ் கலாச்சாரம்” (Flex Culture) என்று சொல்லும் அளவிற்கு ப்ளெக்ஸ் போர்டுகள் வைக்கப் படுகின்றன. முந்தைய நாட்களில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டன. அதுவும் ஏதாவது ஒரு திருவிழா அல்லது மண விழா காலங்களில் மட்டும்.இப்போது ஏன் எதற்கு என்றே தெரியாமல் ப்ளெக்ஸ் வைக்கப்படுகின்றது.
அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. எங்கள் ஊரில் எல்லாம் மாரியம்மாள் கோவில் திருவிழா அல்லது அந்தோணியார் கோவில் திருவிழாக் காலங்களில் அந்தோணியாரும், மாரியம்மாளும் மங்கலாக சிரித்துக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் இப்போது, அந்தோணியாரும், மாரியம்மாளும் பளிச் புன்னகை உபயம் ப்ளெக்ஸ். (நிச்சயமாய் close-up க்கு மாறவில்லை J). இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவை கால்நடைகளே. எப்படி என்கிறீர்களா?
சுவரொட்டி ஒட்டினால், குறைந்த பட்சம் 2 நாட்களில் மாடுகள் மேய்ந்து விடும். ஆனால், ப்ளெக்ஸ் அவைகளுக்கு ஒத்துக்கொள்ளவில்லை போலும். குழந்தையின் பிறந்த நாள் தொடங்கி இறப்பு வரை எல்லாம் ப்ளக்ஸ் மயம்தான் இப்போது.
அதுவும் உயிர் நண்பர்கள் இறந்து விட்டால் மற்ற நண்பர்கள் ப்ளக்ஸ் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே சொல்லி மாளாது. விஜய், அஜீத் உடல்களோடு உயிர் நண்பனின் தலை இணைந்து கொள்ளும். 23ஆம் புலிகேசியை உட்கார்ந்து பார்த்து யோசிப்பார்கள் போல.  இந்த மாதிரி சில ப்ளக்ஸ் போர்டுகளைப் பார்த்து வருத்தம் வருவதற்குப் பதில் சில சமயங்களில் நான் சிரித்ததும் உண்டு.
இந்த மாதிரி பேனர்கள் வந்ததால் சில மக்களும் பாதிக்கப்பட்டுள்ளது உண்மையே. யார் அவர்கள் எனில், கையால் சுவற்றில் ஓவியம் வரைபவர்கள். அதாவது சுவரோவியக் கலைஞர்கள். ஆம், அவர்களின் வாழ்வியல் ஆதாரமே ஆட்டம் கண்டுவிட்டது என்று கூட சொல்லலாம். இதனைப் பற்றிய செய்தித் தொகுப்பு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது.
எதிர் கட்சித் தலைவர்களை நேரிலும், அருகருகேயும் சுவற்றில் சந்திக்க வைத்தவர்கள், இன்று சந்தியில் நிற்கும் நிலை. எந்த ஒரு சின்ன மாற்றமும் அதனைச் சார்ந்தவர்களை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதற்கு ப்ளக்ஸ்  நல்ல சான்று.

No comments:

Post a Comment